செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2020-11-28 08:01 GMT   |   Update On 2020-11-28 08:01 GMT
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பாகலூர் செல்லும் சாலையில் புதிய மாநகராட்சி அலுவலகம் பின்புறம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வாகனப்பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்களிடம் புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 698 சிக்கியது.

கணக்கில் வராத பணம் இருந்ததால் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளிடம், துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News