செய்திகள்
குருவிநத்தம் அரசு பள்ளியில் மழையில் நனைந்து சேதமடைந்த அரிசி மூட்டைகளை படத்தில் காணலாம்.

கிராம மக்களுக்கு வழங்க இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

Published On 2020-11-17 13:58 GMT   |   Update On 2020-11-17 13:58 GMT
ரேஷன் அட்டைதாரர் களுக்கு வழங்க இருந்த அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் மக்கள் வேதனை அடைந்தனர்.
பாகூர்:

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மத்திய அரசு சார்பில் மாதம் தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இரண்டு மாதங்களுக்கு சேர்த்து நபர் ஒருவருக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் கிராம மக்களுக்கு வழங்குவதற்காக, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரிசி மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பள்ளியின் சுவர்களின் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அங்கு, அடுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும், அரிசி மூட்டைகளின் மீது பூஞ்சைகள் வளர்ந்துள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அங்கு இருப்பில் உள்ள மூட்டைகள் சேதமடைந்து வருகிறது.

நேற்று அரிசி வாங்குவதற்காக பள்ளிக்கூடத்துக்கு கிராம மக்கள் சென்றனர். ஆனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சைகள் வளர்ந்த அரிசியை அவர்கள் வாங்காமல் திரும்பினர். இது பற்றி குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துறை அதிகாரிகள் குருவிநத்தம் பள்ளிக்கு வந்து மழை நீரால் நனைந்து சேதமடைந்த அரிசி மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், சேதமான 33 மூட்டைகள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

மழையில் நனைந்து அரிசி மூட்டைகள் சேதமடைந்தது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. எனவே பள்ளிகளில் இருப்பு வைத்துள்ள அரிசி மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News