செய்திகள்
ஈரோடு மேட்டூர்ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் இருப்பதை காணலாம்

ஈரோட்டில் 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறப்பு

Published On 2020-11-16 03:52 GMT   |   Update On 2020-11-16 03:52 GMT
ஈரோட்டில் 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபோது சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பின்னரும், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் மத்திய அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஈரோட்டில் தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

தீபாவளி என்றாலே தியேட்டரில் வெளியாகும் புதுப்படங்களை பார்க்க ரசிகர்கள் பட்டாளம் திரண்டு காணப்படும். அதனால் பிரபல நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களின் சினிமா தியேட்டர்கள் நள்ளிரவில் இருந்தே பரபரப்பாக காணப்படும். திரைஅரங்கம் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் வழக்கமான ஆரவாரத்துடன் ரசிகர்கள் யாரும் திரை அரங்குகளுக்கு வரவில்லை.

தியேட்டர்களில் அமர்ந்து படம் பார்க்க கட்டுப்பாடுகள் இருப்பதால், ரசிகர்கள் வருகை குறைந்து உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த தீபாவளிக்கு தியேட்டர்கள் திறப்பதில் பல்வேறு தடைகள் இருந்ததால் மக்களின் அபிமான நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை. இதுவும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வராததற்கு காரணமாகும் என்று தியேட்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக திரையரங்குகள் திறந்து திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும்போது ரசிகர்கள் தியேட்டர்களை தேடி வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
Tags:    

Similar News