செய்திகள்
நாகூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை
நாகூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகூர் அருகே பூதங்குடி கிராமத்தில் நாகூரில் இருந்து கங்களாஞ்சேரி செல்லும் சாலையில் மீன்வள பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி அருகே வெட்டாறுபாலம் ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் நேற்றுமுன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கே டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உடலை புதைத்தனர்.
இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.