செய்திகள்
கோப்புபடம்

திண்டிவனம் சிறையில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி - பணிச்சுமையால் பிளேடால் கையில் கிழித்ததாக புகார்

Published On 2020-11-12 12:58 GMT   |   Update On 2020-11-12 12:58 GMT
பணிச்சுமையால் திண்டிவனம் சிறையில் போலீஸ்காரர் கையில் கிழித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் நல்லியக்கோடன் நகரை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் பாரதி மணிகண்டன்(வயது 26). இவர், திண்டிவனம் கிளை சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 மாதத்துக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பணியில் இருந்த பாரதி மணிகண்டன் திடீரென தான் வைத்திருந்த பிளேடால் இடது கை மணிக்கட்டில் கிழித்து கொண்டார். இதனால் அவரது கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது பற்றி அறிந்ததும் திண்டிவனம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார், பாரதி மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், திண்டிவனம் கிளை சிறையில் பணியின்போது அமர்வதற்கு நாற்காலி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது நாற்காலியில் அமரக்கூடாது என்று ஜெயிலர் கூறி விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக நின்று கொண்டே பணியில் இருந்தேன். சில நாட்களில் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறேன். நேற்று காலை 9 மணிக்கு பணிக்கு வந்தேன். இரவு 7 மணி வரை நின்று கொண்டே இருந்தேன். மேலும் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன் என்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமையால் போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News