செய்திகள்
கோம்பை நாய்

ராஜபாளையத்தில் கோம்பை நாய்களை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2020-11-08 12:13 IST   |   Update On 2020-11-08 12:13:00 IST
ராஜபாளையத்தில் கோம்பை நாய்களை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.
ராஜபாளையம்:

ராஜபாளையம் என்றாலே வீரமான நாய்கள் நினைவுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் ராஜபாளையம், சிப்பிபாறை, கோம்பை, கன்னி வகை நாய்கள் இப்பகுதியில் மிகவும் பிரபலமாக வளர்க்கப்பட்டு அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

இதில் கிராமங்கள் முதல் பட்டி தொட்டிகள் வரை இந்த ரக நாய்களை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி ராஜபாளையம், சிப்பிபாறை, கோம்பை ரக நாய்களை வளர்க்க வேண்டும் எனவும் பாரம்பரிய கலாசாரத்துடன் இணைந்தது என்பதால், இதை வளர்க்க அனைவரும் முன் வர வேண்டும் என்றார்.

சத்தீஷ்கர், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் இந்த ரக நாய்களை வளர்ப்பதற்கு மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது கோம்பை ரக நாய்கள் ராணுவத்தில் சேர்த்து பயிற்சியளித்து பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த வகை நாய்கள் ஆண்டிற்கு இருமுறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 குட்டிகள் வரை ஈனும் வழக்கம் உள்ளது.

கோம்பை நாய்களுக்கு மட்டுமே கால் நகம் கருப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை நாய்களை வளர்ப்பவர்கள் தவிர வேறு யாரும் வீட்டின் உள்ளே வந்தால் மூர்க்கத்தனமாக தாக்கத் தொடங்கும் என்பதால், இதை வளர்ப்பதற்கு ஒரு சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனை சங்கிலி போட்டு கட்டாமல் மிகவும் ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும் என்பதால், இதை ஒரு சிலரால் மட்டுமே வளர்க்க இயலும்.

பெரும்பாலும் இந்த வகை நாய்கள் செவலை நிறத்தில் தான் காணப்படும். பெரிய வீடு உள்ளவர்கள், ஒரு சில குறிப்பிட்ட நபர்களால் தான் இந்த வகை நாய்களை வைத்து பராமரிக்க முடியும், என்பதால் இந்தவகை நாய்கள், மிகவும் அபூர்வமாகவும், அரிய வகையாகவும் இருந்து வருகிறது. சமீப காலமாக கோம்பை நாய்களை வாங்கி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை ராஜபாளையத்தில் அதிகரித்து வருகிறது.

Similar News