செய்திகள்
கொரோனாபரிசோதனை செய்வதில் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்களுக்கு அமைச்சர்பாஸ்கரன் பாராட்டு சான்றிதழ் வழங்கிய காட்சி

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-11-06 14:17 IST   |   Update On 2020-11-06 14:17:00 IST
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவபணியாளர்களுக்கும், ரத்த தானம் செய்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கை:

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சமயத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிறப்பாக பணியாற்றிய மைக்ரோ பயாலஜி துறையில் பணிபுரிபவர்களுக்கு பாராட்டு விழாவும், மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழாவும் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் முன்னிலை வகித்தார். ரத்த வங்கி (பொறுப்பு) டாக்டர் கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார்.

விழாவில் ரத்த கொடையாளர்கள், சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதே அரசு மருத்துவமனையின் சிறப்பு. அதிலும் குறிப்பாக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறப்பான சேவை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சிவகங்கை மருத்துவ கல்லுாரியில் கடந்த 2 ஆண்டுகளில் ரத்தம் இல்லாமல் யாரும் பாதிக்கப்பட்டதில்லை. அந்த அளவு இந்த மருத்துவமனைக்கு கொடையாளர்கள் மூலம் ரத்தம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 50 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 2 ஆயிரத்து 614 பேர் ரத்த தானம் செய்தள்ளனர்.

இதுபோல் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் உள்ள மைக்ரோபயாலஜி பிரிவில் பணிபுரிபவர்கள் கடந்த 29-4-2020-க்கு பிறகு இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளனர். இது போல் எங்குமே செய்யவில்லை மேலும் மருத்துவமனைக்கு நுரையீரலில் 80 சதவீத தொற்றுடன் வந்தவரை 85 நாட்கள் மருத்துவமனையில் வைத்து முழுமையாக குணப்படுத்தி அனுப்பியுள்ளனர். சிவகங்கை மருத்துவ கல்லூரியில் நர்சிங் கல்லுாரி தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ரத்த தானம் செய்த சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவர்களுக்கும், ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் அய்யப்பன், குணசேகரன், மணிகண்டன், உள்பட 40 பேருக்கும் மற்றும் மைக்ரோ பயாலஜி பிரிவில் பணிபுரிந்த டாக்டர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், பாராட்டு சான்றிதழ் மற்றம் கேடயத்தை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, மருத்துவ அலுவலர் டாக்டர் மீனா, உதவி மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் முகமது ரபி, மீதுன், ரத்த வங்கி டாக்டர் வசந்த், கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News