செய்திகள்
கோப்புபடம்

மறைமலைநகர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 வாலிபர்கள் கைது

Published On 2020-10-19 09:55 GMT   |   Update On 2020-10-19 09:55 GMT
மறைமலைநகர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள 14 விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் திருடர்களை பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நெடுமாறன், சசிக்குமார், ஆனந்தஜோதி, செல்வம், ஏட்டு பட்டாபி ஆகியோர் தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்களை திருடும் திருடர்களை கடந்த சில நாட்களாக வலைவீசி தேடிவந்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது 3 வாலிபர்களும், போலீசாரிடம் முன்னுக்கு முரணான தகவல்களை அளித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது 3 பேரும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 14 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து மறைமலைநகர் போலீசார் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அப்பு என்ற திருநாவுக்கரசு (வயது 20), தெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் (23), ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 14 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர் இதனையடுத்து 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News