செய்திகள்
கொலை

குடிபோதையில் ஆட்டோ டிரைவரை குத்திக் கொன்ற நண்பர்- விஷம் தின்று தற்கொலை முயற்சி

Published On 2020-10-17 18:44 IST   |   Update On 2020-10-17 18:44:00 IST
வில்லியனூர் அருகே ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். போதையில் நண்பரை கொலை செய்த விரக்தியில் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
வில்லியனூர்:

வில்லியனூரை அடுத்த உறுவையாறு பேட் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). ஆட்டோ டிரைவர். ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்து வந்தார். இவர் தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவரான நண்பர் பிரபு என்பவருடன் சேர்ந்து வீட்டு மனைகள் வாங்கி விற்பனை செய்து வந்தார்.

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறத்தில் வெங்கடேசனும், பிரபுவும் நேற்று முன்தினம் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கமிஷன் தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபு தன்னிடம் இருந்து கத்தியை எடுத்து வெங்கடேசனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். கத்திக்குத்து காயமடைந்த வெங்கடேசன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ரத்த வாந்தி எடுத்து வெங்கடேசன் இறந்து இருக்கலாம் என்று கருதி 174-வது பிரிவின்படி தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெங்கடேசன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் வெங்கடேசனும், பிரபுவும் சேர்ந்து மதுகுடித்ததும், அவரை தேடி வீட்டிற்கு சென்றபோது பிரபு தலைமறைவானதும் தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் தேடிவந்தனர்.

இதற்கிடையே நேற்று காலை போதை தெளிந்த நிலையில் நண்பரை குத்திக் கொலை செய்தது குறித்து வேதனை அடைந்த பிரபு அரளி விதையை அரைத்து தின்று விட்டு விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைவதற்காக சென்றார். அங்கிருந்தவர்களிடம் நடந்த விவரத்தை தெரிவித்தபோது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கருதி பிரபுவை கோர்ட்டில் இருந்து விரட்டி விட்டனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற பஸ்சில் பிரபு ஏறினார். பஸ் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே பிரபுவை திருவண்ணாமலை அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுப்பற்றி மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரபுவின் உடல்நிலை சீரானதும் அவரிடம் வெங்கடேசனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Similar News