செய்திகள்
மயிலாடுதுறையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் கைது - 3 பேருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழுந்தூர் தட்டாரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). திருவிழந்தூர் ஆழ்வார்குள தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். நேற்றுமுன்தினம் விக்னேஷ், மணிகண்டனிடம் ஒரு மணிநேரம் மோட்டார்சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார். மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை தர மறுத்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை அவர் விளையாட்டாக உதைத்து விட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேசை செல்போனில் அழைத்து உள்ளார். வீட்டில் இருந்த விக்னேஷ் திருவிழந்தூர் மெயின் ரோட்டிற்கு வந்துள்ளார். அப்போது மணிகண்டன் தான் வைத்திருந்த கத்தியால் விக்னேசை குத்தினார். மேலும் மணிகண்டனின் நண்பர்களும், விக்னேசை தாக்கினர்.
இதில் காயமடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மணிகண்டன், திருவிழந்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிபாரதி (19), சேந்தங்குடி ராசி நகரை சேர்ந்த ரூபன் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக பல்லவராயன் பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த அபாயம் என்கிற சுதாகர், அதே பகுதியை சேர்ந்த வீராசாமி மகன் மற்றொரு விக்னேஷ், அம்பேத்கர் நகரை சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.