செய்திகள்
பாஜக

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம்- பாஜக எச்சரிக்கை

Published On 2020-10-05 03:59 GMT   |   Update On 2020-10-05 03:59 GMT
மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கவேண்டும், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை புதுவையில் அமல்படுத்தவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இந்த திட்டத்தின்படி, சொந்த மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் போது தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் படி தங்களுக்குரிய உணவு தானியங்களை அவரவர் வசிக்கும் இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.

நமது அண்டை மாநிலமான தமிழகத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மற்றும் இலவசமாக பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளை மூடி சாதனை புரிந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை அல்லது அதற்கான பணத்தை பலமாதங்களாக கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 1 கிலோ அரிசி ரூ.3-க்கும், 1 கிலோ கோதுமை ரூ.2-க்கும் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு சம்பள பாக்கி முழுவதும் அரசு வழங்க வேண்டும். இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் பா.ஜ.க. சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News