செய்திகள்
வழக்கு

வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம்- புதுவை காங்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு

Published On 2020-09-30 09:23 GMT   |   Update On 2020-09-30 09:23 GMT
வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம், ராஜீவ் காந்தி சதுக்கம், வில்லியனூர், திருக்கனூர், பாகூர், தவளக்குப்பம், மதகடிப்பட்டு ஆகிய 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டது. இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மற்ற இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறப்படவில்லை. இதில் பங்கேற்றவர்கள் மீது பேரிடர் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்தந்த பகுதி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

அதன் படி கோரிமேடு போலீசில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார் (காங்கிரஸ்), வெங்கடேசன் (தி.மு.க.) உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் 145 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் திருபுவனை போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 75 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News