செய்திகள்
மரணம்

பங்களாவில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன்-மனைவி பலி

Published On 2020-09-29 09:51 GMT   |   Update On 2020-09-29 09:51 GMT
புதுவை அரியாங்குப்பத்தில் பங்களாவில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் கணவன், மனைவி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் புதுக்குளம் அந்தோணியார் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது44). இவரது மனைவி பத்மாவதி (வயது 40) இவர்களுக்கு ஷில்பியா (17), அன்னாள் (15) ஆகிய 2 மகள்கள் உள்னர்.

இவர்களது வீட்டின் அருகில் ஒரு பங்களா வீடு உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் லகோத்ராஜ் பிரான்சில் வசித்து வருகிறார். அவரது அனுமதியின் பேரில் அந்த வீட்டை நெப்போலியன் பராமரித்து வந்துள்ளார்.

தற்போது ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், அந்த பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இருந்து பட்டாசுகளை வாங்கி அந்த பங்களா வீட்டில் நெப்போலியன் இருப்பு வைத்து இருந்தார்.

மேலும் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் விபத்து ஏற்பட்டு, பங்களா வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.

இந்த வெடி விபத்தில் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்தது.

இதில் அந்த வீட்டு சுவர் முழுவதுமாக இடிந்து நெப்போலியன் வசிக்கும் வீட்டில் விழுந்தது. இதில் வீட்டின் சமையல் அறையில் இருந்த நெப்போலியன், பத்மாவதி ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த நிலையில் வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுவை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய கணவன்- மனைவி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்த சமயத்தில் நெப்போலியன் ஒரு மகள் கடைக்கு சென்று இருந்தார். மற்றொருவர் சத்தம் கேட்டதும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் உயிர் பிழைத்தார்.

இந்த வெடி விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News