செய்திகள்
பண்ருட்டி அருகே லாரி மோதி இளம்பெண் பலி
பண்ருட்டி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பண்ருட்டி:
பண்ருட்டி சாமியார் தர்கா பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன்(வயது 30). பெயிண்டர். இவருடைய மனைவி ஜோகிரபி(28). இந்த தம்பதிக்கு அசாருதீன்(10) என்ற மகனும், ஆப்ரின் பாத்திமா(8) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜோகிரபி, தனது குழந்தைகளை மொபட்டில் அழைத்துக்கொண்டு கானஞ்சாவடிக்கு புறப்பட்டார். சாத்திப்பட்டு மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த லாரிக்காக ஒதுங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. இதில் சுதாரித்துக்கொண்ட ஜோகிரபி தனது 2 குழந்தைகளையும் சாலையில் இருந்து வெளியே தள்ளி விட்டார். ஆனால் அவர் லாரியின் சக்கரத்தில் சிக்கினார்.
இதில் ஜோகிரபியின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 2 குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பினர். இதை பார்த்து 2 குழந்தைகளும் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று ஜோகிரபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.