செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நவம்பர் 10-ந்தேதி இறுதி விசாரணை: சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு

Published On 2020-09-23 02:00 GMT   |   Update On 2020-09-23 02:00 GMT
நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நவம்பர் 10-ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்-அமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ‘ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காத சபாநாயகர், தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதமானது’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இருதரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம்சாட்டி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர்.

இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமை மீறல் குழு கடந்த 7-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் புதிதாக நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்ற பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கை விசாரிக்கிறார்.
Tags:    

Similar News