செய்திகள்
கைது

தொழிலாளி அடித்துக் கொன்ற வழக்கில் கோவில் பூசாரி உள்பட 2 பேர் கைது

Published On 2020-09-13 12:29 GMT   |   Update On 2020-09-13 12:29 GMT
பண்ருட்டி அருகே தொழிலாளியை குத்துவிளக்கால் அடித்துக் கொன்ற வழக்கில் கோவில் பூசாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடு மேட்டுக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரத்தினசாமி மகன் ரவி (வயது 43). தொழிலாளி. கடந்த 9-ந் தேதியன்று நடு மேட்டுக்குப்பத்தில் உள்ள நொண்டி வீரன் அய்யனார் கோவிலில் நடந்த ஊரணி பொங்கல் படையலில் ரவி கலந்துகொண்டு கறி விருந்து சாப்பிட்டார். பின்னர் மது குடித்த அவரை, மர்ம மனிதர்கள் குத்துவிளக்கால் அடித்துக்கொலை செய்து விட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சின்ன காட்டுப்பாளையம் வெள்ளவாரி ஓடை அருகில் பதுங்கியிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், நடுமேட்டுக்குப்பத்தை சேர்ந்த கோவில் பூசாரியான வைரமணி (64) மற்றும் அதே ஊரை சேர்ந்த சிவலிங்கம் மகன் சிவகுரு (24) ஆகியோர் என்பதும் ரவியை அவர்கள் இருவரும் சேர்ந்து அடித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ஊரணி பொங்கல் படையல் விழாவில் கலந்து கொண்டவர்களில் ரவியை தவிர அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதன் பின்னர் நாங்கள் இருவரும் கோவிலில் அமர்ந்து மதுகுடித்தோம். அப்போது அங்கிருந்த ரவி எங்களிடம் மது தருமாறு கேட்டார். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். இதனால் அவர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் கோவிலில் இருந்த மணி மற்றும் குத்துவிளக்கால் அடித்து ரவியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News