செய்திகள்
விபத்து

குன்னூரில் 50 அடி பள்ளத்தில் மலைரெயில் பாதையில் விழுந்த சரக்கு லாரி

Published On 2020-09-11 14:41 IST   |   Update On 2020-09-11 14:41:00 IST
குன்னூரில் 50 அடி பள்ளத்தில் மலைரெயில் பாதையில் சரக்கு லாரி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
குன்னூர்:

கோவையில் உள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் இருந்து தினமும் சரக்கு லாரி ஒன்று பார்சல்களை ஏற்றி கொண்டு நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு செல்வது வழக்கம்.

வழக்கம் போல் நேற்று நள்ளிரவும் கோவையில் உள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் பார்சல்களை ஏற்றி கொண்டு குன்னூருக்கு சரக்கு லாரி புறப்பட்டது. இந்த லாரியை குன்னூரை சேர்ந்த சரவணன்(40) என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை அந்த லாரி குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் உள்ள தடுப்பு சுவரை இடித்து கொண்டு 50 அடி ஆழ பள்ளத்தில் உள்ள மலைரெயில் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த டிரைவர் சரவணன் வெளியில் வரமுடியாமல் தவித்தார். தகவல் அறிந்த குன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News