செய்திகள்
கோப்புபடம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் பலி

Published On 2020-09-10 06:55 GMT   |   Update On 2020-09-10 06:55 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி காந்திமதி. இவர் அப்பகுதி நாரைக்கால் ஏரியோரம் வயலில் உள்ள ஒரு கட்டிடத்தில் வாணவெடி மற்றும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்த தொழிற்சாலை இயங்கவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், கடந்த 4-ந்தேதி தொழிற்சாலை திறக்கப்பட்டு, நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணியில் 9 பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வெடி செய்வதற்கான மருந்தை தொழிலாளர்கள் பக்குவப்படுத்தி, இடித்தனர். அந்த நேரத்தில் வெடி மருந்து திடீரென வெடித்தது.

அதில் இருந்து எழுந்த தீப்பொறிகள், அருகில் இருந்த வெடி மருந்துகள் மற்றும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த வெடிகள் மீது விழுந்தது. இவை ஒட்டுமொத்தமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த கட்டிடத்தின் சுவர்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த பயங்கர விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் காந்திமதி(வயது 58), அதே ஊரை சேர்ந்த பெருமாள் மனைவி மலர்க்கொடி(65), காந்திமதியின் மகளும், நம்பியார் என்பவரின் மனைவியுமான லதா(40), உத்திராபதி மனைவி சித்ரா(45), மாதவன் மனைவி ராசாத்தி(48), ருக்மணி (38), ரத்னாயாள்(60) ஆகிய 7 பேரும் உடல் கருகி பலியாகினர்.

தீக்காயமடைந்த காந்திமதியின் மருமகளும், முத்துவின் மனைவியுமான தேன்மொழி (35), நம்பியார் மகள் அனிதா(22) ஆகியோர் சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி அனிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்த விபத்தில் இறந்த காந்திமதியின் பேத்தியும், லதாவின் மகளும் ஆவார். இதையடுத்து பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது. படுகாயமடைந்துள்ள தேன்மொழிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அனிதா இறந்த செய்தியை கேட்டதும் அப்பகுதி மக்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News