செய்திகள்
கலெக்டர் சாந்தா

பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-09-05 16:17 IST   |   Update On 2020-09-05 16:17:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1,315 டன் யூரியா, 794 டன் டி.ஏ.பி., 877 டன் பொட்டாஷ் மற்றும் 4,448 டன் காம்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்யவேண்டும் எனவும், மீறினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்த உர விற்பனையாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சில்லரை உர விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.

விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாக உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற் கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு குற்ற வழக்கு தொடரப்படும்.

உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிக பட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகார்களை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கோ அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கோ அளிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News