செய்திகள்
கோப்பு படம்.

புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

Published On 2020-09-05 12:07 IST   |   Update On 2020-09-05 12:07:00 IST
புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களையும் விட்டு வைக்க வில்லை.

ஏற்கனவே அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால், தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் கடந்த சில நாட்களாக சளி, இருமலால் அவதிப்பட்டு வந்தார்.

இதனையடுத்து கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதலே முதலியார்பேட்டை தொகுதியில் பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாஸ்கர் எம்.எல்.ஏ. அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி தனது சொந்த செலவிலேயே தொகுதி முழுவதும் கிருமி நாசினியும் தெளித்து வந்தார்.

இந்த பணிகளையும் நாள்தோறும் பார்வையிட்டு வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Similar News