செய்திகள்
கன்டோன்மெண்ட் அலுவலகம் முன்பு சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

கன்டோன்மெண்ட் நிர்வாகத்தை கண்டித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published On 2020-08-21 19:33 IST   |   Update On 2020-08-21 19:33:00 IST
குன்னூர் அருகே கன்டோன்மெண்ட் நிர்வாகத்தை கண்டித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்:

குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்டில் உள்ள சுகாதார துறையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு 30 ஆண்டாக பணியாற்றிய பரமேஸ்வரன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வழங்க வேண்டிய பண பலன்கள் வழங்கவில்லை. அத்துடன் அவரது குடும்பத்தினர் வசித்து வரும் குடியிருப்பை காலி செய்யுமாறு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

எனவே கன்டோன்மெண்ட் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர் சங்கம் சார்பில் நுழைவு வாசலில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சர்வேஸ்வரன், நிர்வாகிகள் சுரேஷ், சுந்தரம், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பூஜா பலிச்சா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், மரணமடைந்த பரமேஸ்வரனின் பண பலன்களை வழங்குவது, அவரது குடும்பத்தினரை குடியிருப்பிலிருந்து காலி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.

Similar News