செய்திகள்
அரவேனு மூணு ரோடு பகுதியில் குட்டிகளுடன் உலாவரும் கரடிகளை படத்தில் காணலாம்.

கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு- பொதுமக்கள் பீதி

Published On 2020-08-20 20:22 IST   |   Update On 2020-08-20 20:22:00 IST
நாவல் பழ சீசன் தொடங்கியதால் கோத்தகிரியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது சீசன் என்பதால், இந்த மரங்களில் கொத்துக்கொத்தாக காய்கள் காய்த்து பழுத்துள்ளன. இந்த பழம் கரடிகளுக்கு மிகவும் பிடித்தது என்பதால் இந்த பழங்களை சாப்பிடுவதற்காக கூட்டங்கூட்டமாக தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது.

குறிப்பாக கோத்தகிரி அர வேனு அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலை, மூணு ரோடு, அரவேனுவில் இருந்து அளக்கரை செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தனது குட்டிகளுடன் நடமாடுகின்றன. அத்துடன் அங்குள்ள நாவல் மரங்கள் மீது ஏறி பழங்களை பறித்து சாப்பிட்டு வருகின்றன. கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், குடியிருப்பு வாசிகள், தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, நாவல்பழங்களை சாப்பிடுவதற்காக பட்டப்பகலில்கூட கரடிகள் அதிகளவில் வருகின்றன. அவைகள் பழங்களை சாப்பிட்ட பின்னர், அங்குள்ள தேயிலை தோட்டங்களுக்குள் பதுங்கி இருக்கிறது. இதனால் பயமாக இருக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அந்த கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News