செய்திகள்
குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-20 12:02 IST   |   Update On 2020-08-20 12:02:00 IST
விவசாய நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரியூர்:

கோவை அருகே இருகூர் முதல் பெங்களூர் தேவனகொந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாய விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பழையூர் முதல் கிட்டம்பட்டி வரை உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பாலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆண்டியப்பன், தமிழரசன், பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன், ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுனன், நிர்வாகிகள் அன்பு, சின்னசாமி, நக்கீரன், சக்திவேல், செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தளவாய்அள்ளி, குப்புசெட்டிப்பட்டி, நடப்பனஅள்ளி, மாக்கனூர், ஒன்னப்பகவுண்டனஅள்ளி, பாரதிபுரம், வேப்பிலை அள்ளி, பனைகுளம், கிட்டம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி சரவணன், வட்டார செயலாளர் சக்திவேல், கூட்டமைப்பு நிர்வாகிகள் கிருஷ்ணன், ஜெகநாதன், சண்முகம் உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பெட்ரோலிய எண்ணெய் குழாய்களை பதிக்கும் திட்டத்தை மாற்று வழியில் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News