செய்திகள்
கடையின் ஷட்டரை உடைத்துக்கொண்டு கார் உள்ளே நிற்கும் காட்சி.

கோத்தகிரியில் அதிவேகமாக சென்ற கார் கடைக்குள் புகுந்தது

Published On 2020-08-18 15:22 IST   |   Update On 2020-08-18 15:22:00 IST
கோத்தகிரியில் அதிவேகமாக சென்ற கார் கடைக்குள் புகுந்தது. இதில் காருக்குள் இருந்த 4 பேர் எவ்வித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோத்தகிரி:

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளும் வெறிச்சோடியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணிக்கு கோத்தகிரி- மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலையில் ஒரு கார் அதிவேகமாக சென்றது.

பின்னர் அந்த கார் காமராஜர் சதுக்கத்தில் இருந்து டாணிங் டன் செல்லும் பகுதியில் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஒரு கடையின் ஷட்டரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. இதனால் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காருக்குள் 4 பேரை பத்திரமாக மீட்டனர். நல்ல வேளையாக அவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் காரை ஓட்டியது கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 25) என்பதும், அவர் தனது மனைவியை சிகிச்சைக்காக அழைத்துச்சென்று மீண்டும் வீடு திரும்பும்போது விபத்துக்குள்ளானது தெரியவந்தது. அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த விபத்து பதிவாகி உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News