செய்திகள்
ரேசன் கடையை சூறையாடிய காட்டு யானைகள்
கூடலூர் அருகே ரேசன் கடையை காட்டு யானைகள் சூறையாடியது. அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே ஆமைக்குளம் அரசு கல்லூரிக்கு செல்லும் சாலையில் உள்ள கடையை காட்டு யானைகள் சேதப்படுத்தி, கடையில் இருந்த பொருட்களை தின்றும், வெளியே வீசியும் நாசம் செய்தன.
இந்த நிலையில் ஆமைக்குளத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பாண்டியாறு குடோன் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் உள்ள ரேசன் கடையின் கதவை காட்டு யானைகள் உடைத்து, தும்பிக்கைகளை கடைக்குள் விட்டு அங்கிருந்த கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றும், வெளியே வீசியும் சூறையாடியன. இதில் கடையில் இருந்த பொருட்கள் நாசமானது. காட்டு யானைகளின் அட்டகாசத்தில் அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
தொடர்ந்து அதிகாலை வரை அங்கு நின்றிருந்த காட்டு யானைகள், அரசு தேயிலை தோட்டம் வழியாக அடர்ந்த வனத்துக்குள் சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தேவாலா வனத்துறையினர் நேரில் ரேசன் கடையை பார்வையிட்டனர். அப்போது வனத்துறையினரிடம் பொதுமக்கள் கூறுகையில், காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் நாங்கள் அச்சம் அடைந்து வருகிறோம். இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. எனவே காட்டு யானைகளை கண்காணித்து குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும் என்றனர்.