செய்திகள்
தடுப்பணை கட்டும் இடத்தில் திரண்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

குன்னூர் அருகே தடுப்பணை கட்டுவதை தடுத்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-08-15 08:03 GMT   |   Update On 2020-08-15 08:03 GMT
குன்னூர் அருகே தடுப்பணை கட்டுவதை பொதுமக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபாதையை மறித்து கட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
குன்னூர்:

குன்னர் அருகே பர்லியார் ஊராட்சிக்கு பகுதியில் அய்யப்பன் காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியிலிருந்து சோலாடா மட்டம் மற்றும் கோடமலை எஸ்டேட் செல்லும் பிரதான நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே இந்த சாலையை விரிவுபடுத்தி, தார்சாலையாக மாற்ற வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பர்லியார் ஊராட்சி சார்பில் குடிநீர் தேவைக்காக தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நடைபாதையை மறித்து தடுப்பணை கட்ட பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள், அங்கு தடுப்பணை கட்டக்கூடாது என்றுக்கூறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இந்த பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்துவதால் இங்கு தடுப்பணை கட்டக்கூடாது என்று பொதுமக்கள் கூறினார்கள். இதையடுத்து அங்கு தடுப்பணை கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News