செய்திகள்
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் பாறைகள் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

நீலகிரியில் பல இடங்களில் மண்சரிவு - ராட்சத மரங்கள் விழுந்தன

Published On 2020-08-08 14:42 GMT   |   Update On 2020-08-08 14:42 GMT
நீலகிரியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத மரங்கள் விழுந்தன. இதனால் கூடலூர்- ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளதால், மின் வினியோகம் 4 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ் கின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

பலத்த காற்று காரணமாக ஊட்டி அருகே குருத்துக்குளி கிராமத்தில் ஒரு மரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை மின்வாள் மூலம் துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். மார்லிமந்து அணை அருகே கோழிப்பண்ணை சாலையின் குறுக்கே 2 ராட்சத மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. இதில் ஒரு மரம் சிறியதாக இருந்ததால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. மற்றொரு மரம் பெரியதாக இருந்ததால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை பின்பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டு இருந்த குதிரை மீது மரக்கிளைகள் விழுந்ததால் படுகாயம் அடைந்தது. தகவல் அறிந்த கால்நடை டாக்டர்கள் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். ஊட்டி-இத்தலார் சாலை உள்பட நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்கள் விழுந்த பகுதியில் மண் சரிந்து கொண்டே இருக்கிறது. சாலையில் விழுந்து கிடந்த மண் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது. அந்த சாலையில் 2 இடங்களில் அபாயகரமான பகுதி, வாகனங்களில் செல்கிறவர்கள் கவனமாக செல்லவும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News