செய்திகள்
கோப்புபடம்

கூடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது

Published On 2020-08-05 08:43 GMT   |   Update On 2020-08-05 08:43 GMT
அலைவரிசை சேவையை சீராக வழங்கக்கோரி கூடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். உள்பட செல்போன் அலைவரிசை சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப் பிரிவு - 17 ன் கீழ் கொண்டு வரப்பட்ட நிலம் உள்ளது. இங்கு பட்டா நிலம் கிடையாது. இதனால் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிளன் வன்ஸ் என்ற இடத்தில் உள்ள சந்தன மலையில் உச்சியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சிறிய கோபுரம் அமைக்கப்பட்டு பேரூராட்சி மக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வந்தது. தனியார் அலை வரிசை சேவைக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுகளாக பேரூராட்சி பகுதியில் செல்போன் அலைவரிசை சேவையில் குறைபாடு இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். கடந்த 2 மாதங்களாக செல்போன் கோபுரம் செயல் இழந்து கிடக்கிறது. இதனால் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். முக்கிய காரணங்களுக்காக கூடலூருக்கு வந்து செல்போன் பேச வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓவேலி பேரூராட்சி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொலைத் தொடர்பு வசதி இன்றி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஓவேலி மக்கள் சார்பில் இப்னு என்பவர் கூடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு நேற்று பகல் 11 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது கையில் பல்வேறு வாசகங்களை கொண்ட அட்டைகளை ஏந்தியவாறு நின்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்பட வில்லை.

இதையொட்டி அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக இப்னுவை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News