செய்திகள்
கோப்புபடம்

பாகூர் அருகே குடிபோதை தகராறில் ரவுடிக்கு கத்தி வெட்டு - இறைச்சி கடைக்காரர் கைது

Published On 2020-07-22 21:31 IST   |   Update On 2020-07-22 21:31:00 IST
பாகூர் அருகே குடிபோதை தகராறில் ரவுடிக்கு கத்தி வெட்டுப்பட்ட சம்பவம் தொடர்பாக இறைச்சி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:

பாகூர் அருகே குருவிநத்தம் வாழப்பட்டு ரோடு வெங்கட்டா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது அடிதடி, திருட்டு, மணல் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (37). இறைச்சி கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் ரமேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரமேஷ் ஜெய்சங்கரை தாக்கினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக், ரமேஷ் இருவரும் மது குடித்துவிட்டு குருவிநத்தம் பஸ் நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரமேசிடம், ‘ஏன் ஜெய்சங்கரை தாக்கினாய்’ என்று கார்த்திக் கேட்டுள்ளார். இது குடிபோதையில் இருந்த அவர்களுக்குள் வாய்த்தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், இறைச்சி கடையில் பயன்படுத்தும் கத்தியால் கார்த்திக்கை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். கத்தி வெட்டில் காயமடைந்த கார்த்திக் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ரமேசை கைது செய்தனர்.

Similar News