செய்திகள்
கோப்புபடம்

சிதம்பரத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள்

Published On 2020-07-22 14:47 IST   |   Update On 2020-07-22 14:47:00 IST
சிதம்பரத்தில் குடோனுக்கு ஏற்றி செல்லும் வழியில் லாரியில் இருந்து தவறி விழுந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையில் கேட்பாரற்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:

சிதம்பரம் மணுலூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. ரெயில் மூலம் வரும் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடங்கில் இறக்கி வைக்கப்படும்.

பின்னர் இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதன்படி நேற்று சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் வந்தது.

பின்னர் ரெயிலில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டது. அதன்படி ரெயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று குடோனை நோக்கி சென்று கொண்டிருந்தது. சிதம்பரம் தெற்கு வீதி அருகில் வந்தபோது திடீரென லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 12 அரிசி மூட்டைகள் அடுத்தடுத்து சாலையில் விழுந்தது. இதில் சில மூட்டை கிழிந்து சேதம் அடைந்ததால் அரிசி சாலையில் கொட்டிக் கிடந்தது. ஆனால் இதை டிரைவர் கவனிக்காமல் தொடர்ந்து லாரியை ஓட்டிச்சென்றார்.

லாரியில் இருந்து அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்தபோது பின்னால் வாகனங்கள் எதுவும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்று கிடந்ததை பார்த்து பொதுமக்கள் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சாலையில் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கொட்டிக்கிடந்த அரிசியையும் அப்புறப்படுத்தினர். பின்னர் நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அதிகாரிகளை தொடர்பு கொண்டு லாரியில்இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் தவறி விழுந்து கிடப்பதை தெரிவித்தனர். பின்னர் கிடங்கு ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தால் சிதம்பரம் தெற்கு வீதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் தவறி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News