செய்திகள்
சிதம்பரத்தில் விஷம் குடித்து பல்கலைக்கழக ஊழியர் தற்கொலை
சிதம்பரத்தில் விஷம் குடித்து பல்கலைக்கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சிதம்பரம்:
சிதம்பரம் வேங்கான் தெருவில் வசித்து வருபவர் செல்வமுத்துக்குமரன்( வயது 47). இவரது மனைவி ரம்யா(37), இவர்களுக்கு கிருஷ்ணன்(14) என்ற மகனும், கிருஷ்ணவேணி(14) என்ற மகளும் உள்ளனர். செல்வமுத்துக்குமரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் செல்வமுத்துக்குமரனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது செல்வமுத்துக்குமரன் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரம்யா உள்பட 3 பேரையும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இறந்து கிடந்த செல்வமுத்துக்குமரன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வமுத்துக்குமரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செல்வமுத்துக்குமரன் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி ரம்யாவுக்கு திருச்சி சென்று மருந்து மாத்திரை வாங்கி வந்துள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக திருச்சிக்கு சென்று மருந்து வாங்கி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரம்யா மனநலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த செல்வமத்துக்குமரன் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷம்குடித்து பல்கலைக் கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.