செய்திகள்
வேகத்தடைக்கு பெயிண்ட் அடித்த கடை உரிமையாளர்கள்

விபத்தை தடுக்க வேகத்தடைக்கு பெயிண்ட் அடித்த கடை உரிமையாளர்கள்

Published On 2020-07-15 12:31 GMT   |   Update On 2020-07-15 12:34 GMT
வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்கள் வேகத்தடையின் மீது வெள்ளை பெயிண்டால் கோடுகள் போட்டனர்.
ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சவீதா சந்திப்பு செல்லும் வாகனங்கள் அகில்மேடு வீதி வழியாக சென்று வருகின்றன. நாச்சியப்பா வீதி முதல் சவீதா சந்திப்பு வரை இந்த ரோடு நெரிசல் மிகுந்ததாக இருக்கிறது. ரோட்டின் 2 பக்கமும் சாலையை ஒட்டி ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பான சாலையாக இது உள்ளது. இங்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், வேகத்தடையை அடையாளப்படுத்தும் பெயிண்ட் அடிக்கப்படவில்லை. ஜீப்ரா கோடு எனப்படும் இந்த கோடுகள் வரையப்படாததால் அங்கு வேகத்தடை இருப்பது பலருக்கும் தெரியாமல் வந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அந்த பகுதியில் வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்கள் வேகத்தடையின் மீது வெள்ளை பெயிண்டால் கோடுகள் போட்டனர்.

இதுபற்றி கடை உரிமையாளர் மீன்ராஜா என்கிற ராஜசேகர் கூறும்போது, “மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து நெரிசல், இருட்டு காரணமாக வேகத்தடையை கவனிக்காமல் வருபவர்கள் விபத்தில் சிக்கி விடுகிறார்கள். இது குறித்து காவல்துறை, மாநகராட்சி என்று பலமுறை புகார்கள் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் மழை நேரத்தில் கைக்குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியினர் வேகத்தடை தெரியாமல் வந்து, தடுமாறி விழுந்தனர். இதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. எனவேதான் நாங்கள் பெயிண்ட் அடித்தோம்”, என்றார்.
Tags:    

Similar News