செய்திகள்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கடைகள் அடைப்பு

Published On 2020-07-11 18:14 IST   |   Update On 2020-07-11 18:14:00 IST
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நாளை முதல் 7 நாட்களுக்கு கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அரியலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.  

குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில்,  அம்மாவட்டத்தில் 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் முதல்நிலை களப்பணியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூன்று நாட்கள் மூடி கிருமிநாசினி தெளிக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு அறியலூர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி, பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News