செய்திகள்
ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை
ஈரோடு அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜவுளிக்கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் மோத்தா (வயது 50). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் பகுதியில் தனது மனைவி நிஷா, மகன் உதாப் (22) ஆகியோருடன் வசித்து வந்தார். சஞ்சய் மோத்தா அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
கொரோனா காரணமாக தற்போது ஜவுளி வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. மேலும் ஜவுளி ரகங்களை அனுப்பிய இடங்களில் இருந்தும் அவருக்கு பணம் வரவில்லை. இதனால் ஜவுளி உற்பத்தி செய்து கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் சஞ்சய் மோத்தா மிகவும் சிரமப்பட்டு வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சஞ்சய் மோத்தா தனது கடைக்கு சென்றார். அங்கு குறைந்த அளவிலான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். அவர்களும் மதியம் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அப்போது தனியாக அவர் தனது அறைக்கு சென்று அங்கு கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
பின்னர் சிறிது நேரத்தில் குடோனில் இருந்து கரும்புகை வந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜவுளிக்கடை தீப்பிடித்து எரிகிறது என்று நினைத்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
அப்போது தான் சஞ்சய் மோத்தா உடல் கருகிய நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஜவுளி ரகங்கள் மற்றும் எந்திரங்கள் மீது பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அதைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று சஞ்சய் மோத்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.