செய்திகள்
முரளி - சந்துரு

புதுவை அருகே ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு

Published On 2020-07-04 07:22 GMT   |   Update On 2020-07-04 07:22 GMT
புதுவை அருகே ரவுடிகள் 2 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). ரவுடி. இவருக்கும் தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலன் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்வது தொடர்பாக சதி திட்டம் தீட்டி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சங்கராபரணி ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து முகிலன், அவரது தம்பி முரளி (20), கூட்டாளியான கொடாத்தூரை சேர்ந்த சந்துரு (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அருண்குமாரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அந்த கும்பலிடம் பிடிபடாமல் அவர் தப்பி ஓடினார்.

இதையடுத்து முகிலன், முரளி, சந்துரு ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்குப்பம் சாலை வழியாக சென்றனர். அப்போது கைகளில் ஆயுதங்களை சுழற்றியபடி சென்ற அவர்களை, கிராம மக்கள் மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆயுதங்களை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், செங்கல், உருட்டுக்கட்டைகளை எடுத்து வீசி அவர்களை தாக்கினர். இதில் முரளி, சந்துரு ஆகியோர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் முகிலன் மட்டும் தப்பிச்சென்று விட்டார். தன்னை கொல்ல வந்த 2 பேர் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட தகவல் அறிந்த அருண்குமார் தனது கூட்டாளிகளுடன் அங்கு வந்தார்.

ஏற்கனவே காயமடைந்ததில் நிலை குலைந்து இருந்த அவர்கள் இருவரையும் அருண்குமாரும் அவரது கூட்டாளிகளும் உருட்டுக்கடையால் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் முரளி, சந்துரு இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அருண்குமார், அவரது கூட்டாளிகளான பிரம்நாத் (25), சிலம்பு செல்வன் (25) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.

அதன்படி அருண்குமார் உள்பட 3 பேருக்கும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சந்துரு, முரளி ஆகிய இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகளாக அவர் கள் வலம் வந்துள்ளனர். இந்தநிலையில் தான் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தியபோது எதிர் தரப்பினரால் அடித்து கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மேலும் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுதவிர அருண்குமாரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் வந்து நாட்டு வெடிகுண்டுகள் வீசிய முகிலன் மற்றும் கொலை செய்யப்பட்ட முரளி, சந்துரு ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News