செய்திகள்
முகக்கவசம்

நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்

Published On 2020-06-28 13:53 GMT   |   Update On 2020-06-28 13:53 GMT
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் 90 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல், பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒரு சிலருக்கு அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது தவிர பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்களுக்கு பறக்கும்படை மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மூலம் தலா ரூ.50 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி நகராட்சி எல்லையில் கமிஷனர் சரஸ்வதி அறிவுரைப்படி 3 குழுவினர் முகாமிட்டு, இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தவிர உரிய முறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. சுழற்சி முறையில் வாகன சோதனை நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.35,450 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என நீலகிரி மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மூலம் முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News