செய்திகள்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதை காணலாம்

ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூடப்பட்டது

Published On 2020-06-28 13:29 GMT   |   Update On 2020-06-28 13:29 GMT
காவல் பணியில் இருந்தவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூடப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம், ஈரோடு கலெக்டர் அலுவலகமாக விளங்கும் தீரன் சின்னமலை மாளிகையில் 4-வது மாடியில் இயங்கி வந்தது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 35 வயதான ஆண் ஒருவர் காவலர் பணியில் உள்ளார். இவர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில், அவருக்கு கடந்த 23-ந்தேதி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே 24-ந்தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திலேயே பணியில் இருந்தார். காய்ச்சல் இருந்ததால், 25-ந்தேதி முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு எந்த பணியிலும் ஈடுபடவில்லை. நேற்று முன்தினம், அவருக்கான கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

அவர் பணியில் இருந்த தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் பூட்டப்பட்டது. அதுமட்டுமின்றி ஈரோடு கலெக்டர் அலுவலக 4-வது மாடியில் உள்ள மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் பூட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை ஒட்டி இருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகமும் மூடப்பட்டது.

நேற்று முன்தினம், காவலர் பணியில் இருந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்பட அங்கு பணியில் உள்ள 15 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்து உள்ளது.
Tags:    

Similar News