செய்திகள்
கைது

ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2020-06-24 14:28 IST   |   Update On 2020-06-24 14:28:00 IST
ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு கொல்லம்பாளையம் தமிழ்நகரை சேர்ந்தவர் யுவராஜா (வயது 25). சமையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு, ஈரோடு வீரபத்திரா வீதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த மண்டபத்திலேயே தூங்கினார். அப்போது மர்மநபர் ஒருவர் இவரது சட்டைப்பையில் இருந்த ரூ.1,000 மற்றும் செல்போனையும், அவரது மோட்டார் சைக்கிளையும் திருடிக்கொண்டு சென்றார். அதைத்தொடர்ந்து யுவராஜா இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, மர்மநபர் ஒருவர் யுவராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், யுவராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்கிற சுரேஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் பிரகாஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News