செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

சத்தியமங்கலத்தில் நகை கடை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2020-06-23 16:29 IST   |   Update On 2020-06-23 16:29:00 IST
சத்தியமங்கலத்தில் நகை கடை உரிமையாளர் வீட்டு கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சிராஜுல்லா (வயது 53). இவர் ரங்கசமுத்திரம் பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். சிராஜுல்லா உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக குடும்பத்துடன் நேற்று முன்தினம் மதியம் கோவைக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. ஆனால் பூட்டு அப்படியே இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் திறந்திருந்தது. பீரோக்களில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோக்களை பார்த்தபோது அவற்றில் இருந்த 6½ பவுன் நகை, ரூ.9 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை.

இதுகுறித்து சிராஜுல்லா சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ‘வீடு பூட்டப்பட்டு கிடப்பதை யாரோ மர்மநபர்கள் நேற்று முன்தினம் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்து திறந்துள்ளனர். அதன்பின்னர் உள்ளே சென்று பீரோக்களை உடைத்து திறந்து, அவற்றில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்’ என்பது தெரியவந்தது. மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் சென்று அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News