பயணம் செய்யும்போதும் முக கவசம் அணிய வேண்டும்- நாராயணசாமி
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு 10 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் பணியிடம் மற்றும் பயணங்களின்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
பொது இடங்களில் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை தனி நபர்கள் கடைபிடிக்க வேண்டும். பொது இடத்தில் அதிகளவில் கூடுவது தடை செய்யப்படுகிறது.
திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மிகாமலும், இறுதி சடங்கில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்கலாம். பொது இடத்தில் எச்சில் துப்புவது அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.
பொது இடத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை பயன்படுத்த தடை செய்யப்படுகிறது. முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை பின்பற்ற வேண்டும். அலுவலகங்கள், பணியிடங்கள், கடைகள், தொழில், வர்த்தக நிறுவன்களில் வேலைநேரத்தை ஷிப்ட் முறையில் பின்பற்ற வேண்டும். நுழைவு வாயிலில் வெப்ப ஸ்கேனிங், கை கழுவுதல், சுத்திகரிப்புக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.