செய்திகள்
போலீசார் விசாரணை

வானூர் அருகே ரவுடி கொலை- புதுவை ரவுடிகள் 15 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2020-06-08 15:08 GMT   |   Update On 2020-06-08 15:08 GMT
வானூர் அருகே ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் புதுவையை சேர்ந்த ரவுடிகள் 15 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:

புதுவை பூமியான்பேட்டையை சேர்ந்தவர் கொட்டாரமேஷ் (வயது 48). பிரபல ரவுடியான இவர் மீது புதுவை மாநிலத்தில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோட்டக்குப்பம் பகுதிக்கு சென்றார். சின்ன கோட்டக்குப்பம் அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

அவர்களை பார்த்ததும் கொட்டாரமேஷ் வானூர் அருகே உள்ள சின்னக்கோட்டக்குப்பம் ஊருக்குள் சென்றார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினர். அது வெடித்து புகை மண்டலமானது.

அப்போது கொட்டாரமேஷ் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். மற்றொரு குண்டையும் அந்த கும்பல் வீசியது. அந்த குண்டு கொட்டாரமேஷ் மீது பட்டு வெடித்து சிதறியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த மர்ம கும்பல் கொட்டாரமேசை சுற்றி வளைத்தனர். அவரை சரமாரியாக வெட்டினர். இதில் கொட்டாரமேஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கொலை செய்யப்பட்ட கொட்டாரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் கொட்டா ரமேசை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை பிடிக்க கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன், ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் தலமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின்பேரில் புதுவையை சேர்ந்த ரவுடிகள் 15 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொட்டாரமேஷ் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்கு பழியாக கொட்டா ரமேசை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News