செய்திகள்
நல்லாம்பாளையத்தில் உள்ள நீர் வழித்தடங்களில் அமைத்திருந்த பாதைகள்அகற்றப்பட்ட போது எடுத்த படம்.

செந்துறை பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் அமைத்திருந்த பாதைகள் அகற்றம்

Published On 2020-06-07 09:23 GMT   |   Update On 2020-06-07 09:23 GMT
செந்துறை பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் சிமெண்டு ஆலை லாரி நிர்வாகம் அமைத்து இருந்த பாதைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிரடியாக அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் ஒரு தனியார் சிமெண்டு ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்வதற்காக மற்றொரு பாதைக்காக அனுமதி பெற்று சுரங்கம் தோண்டினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே மாற்றுப்பாதையில் சென்று வந்தனர். இந்த நிலையில் அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் நல்லாம்பாளையம், இலங்கைச்சேரி உள்ளிட்ட விவசாய நிலங்கள் மற்றும் நீர் வழித்தடம் ஆகியவற்றை ஆக்கிரமித்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர்.

இதனை அப்பகுதி விவசாயிகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தடுத்து வந்த நிலையில், விவசாயிகளை மிரட்டி அத்துமீறி லாரிகளை இயக்கி வந்தனர். கடந்த மார்ச் மாதம் இப்பகுதியில் ஆய்வுக்கு வந்த மத்திய நீர்வள ஆய்வு விஞ்ஞானி ராஜ்கிஷோர்முகந்தியிடம் விவசாயிகள் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து நேரில் வந்து ஆய்வு செய்த விஞ்ஞானி மாவட்ட கலெக்டர் கூட்டத்தில் சிமெண்டு ஆலைகளுக்கான லாரிகளின் அத்துமீறல் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்றார். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும், அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மேலும் கிராம சபை கூட்டங்களில் அதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து அதிரடியாக செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம், கடம்பன் நல்லாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சிநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் அதிரடியாக சிமெண்டு ஆலை லாரி நிர்வாகங்கள்நீர் வழித்தடங்களில் பாதை அமைத்து லாரிகளை இயக்கி வந்த பாதைகளை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்தனர். மேலும் இனிமேல் இந்த பாதையில் சிமெண்டு ஆலை லாரிகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்க பட்டு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News