செய்திகள்
கோப்புப்படம்

புதுவையில் 75 நாட்களுக்கு பிறகு கடற்கரை சாலை திறப்பு

Published On 2020-06-01 09:31 GMT   |   Update On 2020-06-01 09:31 GMT
புதுவையில் 75 நாட்களுக்கு பிறகு இன்று கடற்கரை சாலையையொட்டி போடப்பட்ட தடுப்புகள் அதிகாலை அகற்றப்பட்டன.
புதுச்சேரி:

புதுவையின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமாக கடற்கரை சாலை உள்ளது.

கடற்கரை சாலையில் காலையும், மாலையும் ஏராளமானோர் நடைபயிற்சிக்கு வருவது வழக்கம். மேலும், குடும்பம் குடும்பமாக புதுவை மக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளும் கடற்கரை சாலையில் கூடுவர்.

இதையடுத்து கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி புதுவையில் கடற்கரை சாலை மூடப்பட்டது. மேலும் கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் நடைபயிற்சிக்கு வர முடியாதவர்கள் வீட்டு அருகில் வீதியிலும், மொட்டை மாடியிலும் நடைபயிற்சி செய்தனர். ஊரடங்கால் மக்கள் வீதியில் நடக்கவே தடை விதிக்கப்பட்டு பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கின் 5-வது கட்ட அறிவிப்பில் புதுவை கடற்கரை சாலையின் தடை நீக்கப்பட்டது. 75 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கடற்கரை சாலையையொட்டி போடப்பட்ட தடுப்புகள் அதிகாலை அகற்றப்பட்டன.

இதனையடுத்து நடைபயிற்சிக்கு மக்கள் வந்தனர்.இருப்பினும் வழக்கம் போல் பெருமளவிலான மக்கள் நடை பயிற்சிக்கு வரவில்லை. குறைந்த அளவில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தனர்.

மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பாகவே புதுவை அரசு கடற்கரை சாலையை மூடி சமூக பரவலுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என நடைபயிற்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News