செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க 27 குழுக்கள்- அமைச்சர் தகவல்

Published On 2020-05-27 06:30 GMT   |   Update On 2020-05-27 06:30 GMT
கொரோனா பரவி வருவதை தடுக்க புதுச்சேரிக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க சுகாதார பணியாளர்களை கொண்ட 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி:

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 4 ஆயிரத்து 90 பேர் புதுச்சேரி திரும்பி உள்ளனர். இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, டெல்லியில் இருந்து வந்த ஒரு சிலருக்கும் தொற்று உறுதியாகி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெளியில் இருந்து வந்தவர்கள் மூலம் பிறருக்கு பரவுவதை தடுக்க அவர்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் வெளியில் இருந்து வந்தவர்கள் ஓட்டல் மற்றும் ஏதேனும் ஒரு வீட்டில் தனிமையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அதுபோல் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க சுகாதாரப் பணியாளர்களை கொண்ட 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்களின் செயல்பாடு குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களின் தற்போதைய நிலை என்ன? அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில்தான் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனரா? இல்லையெனில் வேறு எங்காவது உள்ளனரா? அவர்களால் பிறருக்கு பரவும் வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் உடனடியாக பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News