செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் வேகமாக பரவும் கொரோனா

Published On 2020-05-26 14:31 GMT   |   Update On 2020-05-26 14:31 GMT
புதுவையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

கொரோனா பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 2 மாதமாக ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆரம்ப கட்டத்தில் புதுவையில் டெல்லியில் இருந்து திரும்பிய ஒரு சிலருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களின் மூலம் குடும்பத்தில் ஒரு சிலருக்கு பரவியது.

இதையடுத்து சமூக தொற்றாக மாறவிடாமல் சுகாதாரத்துறை, காவல், வருவாய்த்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தனர்.

தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள் சீல் வைக்கப்பட்டு யாரும் வெளியில் நடமாட அனுமதிக்கவில்லை. சந்தேகத்திற்கு இடமானவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கேயே மருத்துவ முகாமும் அமைத்தனர். இதனால் நோய் தொற்று பரவாமல் கட்டுக்குள் இருந்தது.

நீண்ட காலமாக புதுவையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தது. இதனால் புதுவை மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

பிரதமர் காணொலி காட்சியில் பேசியபோதுகூட புதுவை அதிர்ஷ்டமான பகுதி என குறிப்பிட்டார். இந்நிலையில் சமீப காலமாக நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் நீண்ட காலமாக பாதிப்பு இல்லாமல் இருந்தது. அங்கும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் நோய் தொற்றுடன் சிகிச்சை பெறுகின்றனர். புதுவையில் 23-ந்தேதி 5 பேர், 24-ந்தேதி 3 பேர், 25-ந்தேதி 3 பேர் என நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

இதிலும் டயாலிசிஸ் செய்ய வந்தவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மற்றொருவர் சாதாரண சளி, காய்ச்சலுக்கு வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறும்போது, புதுவையில் கொரோனா சமூக தொற்றாக பரவியுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆனால், மாவட்ட கலெக்டர் அருண் இதனை மறுத்துள்ளார். வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரும்புபவர்களுக்குத்தான் கொரோனா தொற்று உள்ளது.

மேலும் ஏற்கனவே தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும்தான் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்து உள்ளார். இருப்பினும் கொரோனா தொற்று பரவல் புதுவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவாமல் தடுக்க காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2 மாதமாக தீவிர பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களின் பணியால்தான் நோய் தொற்று பரவாமல் கட்டுக்குள் இருந்தது. அவர்களும் தற்போது சோர்வடைந்து விட்டனர். அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும். கட்டுப்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நோய் தொற்று பரவாமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

Tags:    

Similar News