செய்திகள்
ஆரஞ்சு மண்டலம்

பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிய ஈரோடு

Published On 2020-05-23 09:14 GMT   |   Update On 2020-05-23 09:14 GMT
கடந்த 37 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு விளங்கி வந்த நிலையில், நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் மூலம் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 37 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் கவுந்தப்பாடியை சேர்ந்த 50 வயது ஆண் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கவுந்தப்பாடியில் இருந்து கோபிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி கால் உடைந்தது. அவர் காயத்துக்கு கட்டு போட்டுள்ளார். ஆனாலும் கால் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கொரோனா சிறப்பு மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் சேலத்திலேயே இருந்ததால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கொரோனா பாதித்த நபரின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து வந்துள்ளார். அவர் மூலம் இவருக்கு கொரோனா பரவியதா அல்லது காலில் காயம் ஏற்பட்டதற்கு கட்டு போட சென்ற இடத்தில் பரவியதா என தெரியவில்லை. அவருக்கு எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

கடந்த 37 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு விளங்கி வந்த நிலையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் மூலம் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.

Tags:    

Similar News