செய்திகள்
இளம்பெண் கடத்தல்

திங்களூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்

Published On 2020-05-20 12:39 GMT   |   Update On 2020-05-20 12:39 GMT
திங்களூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி. அவருடைய மகன் ரமேஷ் (வயது 26). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு விசைத்தறிக்கூடத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ரமேஷ் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் சில நாட்களிலேயே உடல்நலக்குறைவால் அந்த பெண் இறந்துவிட்டார். ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகள் சசிகலா (20). ரமேசும், சசிகலாவும் அருகருகே உள்ள ஊர் என்பதால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதில் விருப்பம் இல்லாத சசிகலா கடந்த 14-ந் தேதிக்கு ரமேசுக்கு போன் செய்து, எனக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். எனவே நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரமேசும், சசிகலாவும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி பவானிக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் சன்னதியில் ரமேசின் அண்ணன் சுரேஷ் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே ராஜ்குமார் மகளை காணாதது குறித்து திங்களூர் போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி அறிந்த சசிகலா கணவருடன் உடனே காரில் அங்கிருந்து புறப்பட்டு திங்களூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம், சசிகலா, என் விருப்பபடியே நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். இதை யாரும் தடுக்க உரிமை கிடையாது. நீங்கள் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்’ எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து 2 பேரும் காரில் ஏறி அங்கிருந்து புளியம்பட்டிக்கு புறப்பட்டனர். திங்களூர்-நல்லாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சென்றபோது அவர்களது காரின் குறுக்கே மற்றொரு கார் வந்து நின்றது. இதனால் காரை நிறுத்தினர். அப்போது மற்றொரு காரில் இருந்து சசிகலாவின் உறவினர்கள் 6 பேர் உள்பட 10 பேர் திபுதிபு வென இறங்கினர்.

திடீரென அவர்கள் காரில் இருந்த சசிகலாவின் கையைப்பிடித்து இழுத்து தாங்கள் வந்த காருக்குள் தள்ளினர். மேலும் ரமேசுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதன்பின்னர் காரில் ஏறி சசிகலாவுடன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.

தனது கண் முன்பே காதல் மனைவி கடத்தப்பட்டதால் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திங்களூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சசிகலாவை கடத்திச்சென்றதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News