செய்திகள்
தனிமைபடுத்தல் - கோப்புப்படம்

புதிதாக ஒருவருக்கு கொரோனா - புதுவையில் 300 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்

Published On 2020-05-13 14:38 IST   |   Update On 2020-05-13 14:38:00 IST
புதுவையில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 300 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்.

சேதராப்பட்டு:

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுவை அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரை சேர்ந்த 36 வயதுடைய தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நபர் நெட்டப்பாக்கம் அருகே உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு நோய் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. கடந்த 7-ந் தேதி முதல் அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

வீட்டு அருகே உள்ள பாண்லே பூத், அரும் பார்த்த புரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றுக்கும் சென்றுள்ளார். பின்னர் ரெட்டியார் பாளையத்தில் உள்ள டி.வி. கடைக்கு சென்று டி.வி. ஒன்று வாங்கி உள்ளார். அதை காரில் ஏற்றி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அவருடன் நண்பர் ஒருவரும். டி.வி. நிறுவன ஊழியர் ஒருவரும் வந்து இருக்கிறார்கள். 10-ந்தேதி கதிர்காமம் கனகன் ஏரி அருகில் உள்ள கோழிக்கடைக்கு சென்று கறி வாங்கி உள்ளார். 10-ந் தேதி தனது நிறுவன பஸ் மூலம் சென்று அங்கு வேலை பார்த்துள்ளார். அவருடன் 15 பேர் பணியாற்றி இருக்கிறார்கள்.

பின்னர் அவர் அதே பஸ்சில் மாலை வீடு திரும்பினார். 11-ந் தேதி மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஒரு டாக்டரும், 3 நர்சுகளும் சிகிச்சை அளித்துள்ளனர். அவரை இந்திரா காந்தி மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.

பின்னர் வீட்டில் தனிமையில் இருக்கும்படி ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத அவர் நேற்று மீண்டும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் 6 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். பின்னர் 15 ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளார். திரும்பி வரும் போது 6 பேர் பஸ்சில் வந்துள்ளனர்.

இதனால் இந்த வகையில் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அவரது மனைவி, மகன், மகள், பக்கத்து வீட்டுக்காரர்கள், நெருங்கி பழகியவர்கள், அவர் சென்ற இடங்களில் எல்லாம் இருந்தவர்கள், தொழிற்சாலையில் அவருடன் பணியாற்றிய வர்கள், பஸ்சில் அவருடன் பயணம் செய்தவர்கள் என சுமார் 300 பேரை தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அவர் வசித்த பகுதிக்கு வெளியில் இருந்து ஆட்கள் வராமல் தடுக்கும் வகையிலும், உள்ளே இருந்து மக்கள் வெளியே செல்லாமல் தடுக்கும் வகையிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ்களை கல் மண்டபம் மக்கள் தங்கள் ஊர் வழியாக செல்லக்கூடாது என கருதி மறியல் செய்தனர்.

அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் தமிழக பகுதியை சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் மூலம் நோய் தொற்று பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியதாவது:-

அருமார்த்தபுரம் தொழிலாளிக்கு நோய் தொற்று எப்படி ஏற்ட்டுள்ளது?என ஆய்வு செய்து வருகிறோம்.தற்போது கொரோனா மருத்துமனையில் சிகிச்சை பெறுவோருக்கு நோப் அறிகுறி இல்லை.

இதனால், புதுவை மக்ககள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மூககவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி முலம் கைகழுவ வேண்டும். சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இதற்காகவே சுகாதாரத்துறை ஆரோக்கிய செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் பாதிக்கப்பட்ட நபர் கடைசியாக எங்கு சென்று வந்தார்? என்ற விவரம் தெரியும்.

இதன்மூலம் எங்கிருந்து தொற்று பரவியிருக்கும்? என கண்டறியலாம். எனவே இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மோகன்குமார் கூறினார்.

Similar News