தடுப்புகள் அகற்றப்பட்டாலும் வெறிச்சோடிய அரியாங்குப்பம் மார்க்கெட்
பாகூர்:
அரியாங்குப்பம் சொர்ணாநகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட நகர்கள் மற்றும் அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
தற்போது 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறந்து விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்பேரில் நேற்று மதியம் சொர்ணாநகரில் ஒருசில தெருக்கள் தவிர மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த நிலையில் தடுப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டது. தற்போது அரியாங்குப்பம் புதிய பாலம் வழியே போக்கு வரத்து தொடங்கப்பட்டதால் முன்புபோல் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வழக்கம்போல் சென்று வருகிறார்கள்.
அதே வேளையில் அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், அரிசி கடைகள் இன்று காலை திறக்கப்பட்டாலும் ஒருசிலர் மட்டுமே காய்கறி மற்றும் பொருட்களை வாங்க வந்தனர். இதனால் அப்பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது. கொரோனா பீதி காரணமாகவே யாரும் அங்கு பொருட்கள் வாங்கவரவில்லை என்று கூறப்படுகிறது. பழைய பூரணாங்குப்பம் சாலையில் திறந்து இருந்த காய்கறி கடைகளில் கூட்டம் காணப்பட்டது.