செய்திகள்
கோடை வெயில்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி

Published On 2020-05-11 09:44 GMT   |   Update On 2020-05-11 09:44 GMT
புதுவையில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவையில் பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயில் காலம் தொடங்கிவிட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும் வெப்பத்தால் வீட்டிற்குள்ளே இருக்க முடியாத சூழ்நிலை உள்ளது. வீட்டிற்கு வெளியே வந்தாலும் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 4-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கத்திரி வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. அதிகாலை 7 மணிக்கே அனலை கக்கும் வெயில் அடித்து வருகிறது.

பகல் 12 மணியளவில் சுட்டெரிக்கும் வெயிலினால் சாலைகள் கானல்நீராக காட்சியளிக்கிறது. வீடுகளில் பேன், ஏ.சி. போன்ற மின்சாதன பொருட்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் பல வீடுகளில் பழுதாகியும் உள்ளது. இவற்றை சீர்செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை கோடை வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. 6 மணிக்கு மேலும் காற்று வீசுவதில்லை.

இதனால் இரவு குளிர்சாதன வசதி இல்லாத வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி புழுக்கத்தினால் புலம்பி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி, வெள்ளரி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் சென்னை வானிலை மையம் 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. ஆனால் ஒரே ஒரு நாள் லேசாக மழை தலைகாட்டிவிட்டு சென்றுவிட்டது.

இதனால் தற்போதைய சூழலில் மனதையும், உடலையும் குளிர்விக்க மழை பெய்யாதா? என்று புதுவை மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

Tags:    

Similar News